இன்றைய கால இளைஞர்கள் பலர் அன்பைப் பற்றியும் அதை அடையும் வழிகளைப் பற்றியும் எதிர்மறையான, குழப்பமான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். இதில் இன்னும் குழப்பத்தை அதிகரிக்கும் விதமாக, பொது வாழ்வில் உள்ளவர்களும், தலைவர்கள் பலரும் தங்களை கிறிஸ்தவர் எனக் கூறிக்கொண்டு, தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் முரணான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறார்கள். அதே நேரம், மக்கள் பலர் தேவனுடைய வார்த்தையின் படி வாழ தங்களை அர்ப்பணிக்கும் இவ்வேளையில், வாழ்கையின் எல்லா சூழலிலும் எதையும் பகுத்தறியும் வண்ணமாய், தேவனுடைய வார்த்தையை நன்கு கற்று அறிதல் வேண்டும். நல்ல உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், நாம் தேவனுடைய வார்த்தையின் படி வாழ வேண்டும்.
பெரும்பாலும் திருமனமாகாத ஜப்பானிய மற்றும் பன்னாட்டு இளையோரைக் கொண்ட நமது லைஃப்ஹவுஸ் சபையை வழிநடத்துவதில், நானும் எனது கணவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறோம். அதனாலே, இப்புத்தகம் ஜப்பானிய கலாச்சாரத்தை மனதில் கொண்டு எழுதப்பட்டது. வருடங்கள் மாறினாலும் மாறாத ஒரே கேள்வி – “நான் ஒரு கிறிஸ்தவன், எவ்வாறு நான் எதிர் பாலினத்தவரோடு அன்பின் உறவைக் கண்டுகொள்வது?”
எனவே, இக்கேள்விக்கு பதில் கூறும் விதமாக, சுலபமாக கையாளும் சில வழிகளையும், செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை, கேள்வி பதில்கள் மற்றும் பயனுள்ள தகவல்களையும் தொகுத்திருக்கிறோம்.
மொத்தம் ஆறு படிகள்; அதில் முதலாவது ‘நட்பு’, இறுதியானது ‘திருமணம்’. இதனிடையே வேறு சில படிகளும் உண்டு. இவையெல்லாம் கட்டளைகள் அல்ல. திருமணத்திற்கு சற்று முந்திய உறவைக் குறித்த, பேசப்படாத உண்மைகளை இன்றைய கிறிஸ்தவர்களுக்கு தெளிவுபடுத்த உதவும் வழிகாட்டி.
எங்களால் இயன்ற அளவுக்கு இவற்றையெல்லாம், வேதத்தின் அடிப்படையிலும், எங்களுடைய இருபத்தி ஒன்பது வருட திருமண வாழ்க்கையிலும், பல வருட ஊழியத்திலும் நாங்கள் கவனித்து உணர்ந்த காரியங்களில் இருந்து கூறியுள்ளோம். இவ்வளவு நாட்களில், இவற்றையெல்லாம் நாங்கள் கேட்டதும், பார்த்ததும் உண்டு. இதில் வெற்றிபெற்றவர்களையும், தோல்வியுற்றவர்களையும் கண்டுள்ளோம். உறவுகள் வெற்றி பெறுவதையும், முறிவடைவதையும் குறித்து சற்று ஆழ்ந்து சிந்திக்கவும் செய்துள்ளோம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஓர் முடிவிற்கு வந்துள்ளோம். அது என்னவென்றால், இன்றைய கால கட்டத்தில், நல்ல உறவுகளைக் கட்டி எழுப்ப தேவையான ஞானம் தேவனுடைய வார்த்தையில் மட்டுமே உள்ளது. யாரெல்லாம் தேவனுடைய வார்த்தையை ஒரு பொருட்டாக எண்ணாமல், அதை விட்டு அதிக தூரம் போகிறார்களோ, அவர்களெல்லாம் உறவு எனும் நெருப்போடு விளையாடுகிறார்கள்.
இன்றைய காலத்தில், பல இளைஞர்களும், இளம்பெண்களும் நண்பர்களோடு குழுவாக கூடும் போதும், சமூக வலைத்தளங்களில் உரையாடுவதிலும் சிறந்து விளங்குறார்கள். ஆனால் ஒருவரோடு ஒருவர் தனிப்பட்ட உரையாடல்கள், தனிப்பட்ட ஒரு உறவை கட்டி எழுப்புவது என வந்து விட்டால், அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை. எனவே, கற்றலும் கண்டுபிடித்தலும் நிறைந்த இந்த பயணத்தைத் தொடங்குவோம். ஒருவரோடு தனிப்பட்ட உரையாடல்களிலும் சிறந்து விளங்க வேண்டுமென துணிந்து கனவு காணுங்கள். நிறைவான ஒரு திருமணத்திற்காக துணிந்து கனவு காணுங்கள். அசைக்க முடியாத நபராக துணிந்து கனவு காணுங்கள். தேவனுடைய உதவியால் நீங்கள் இவற்றையெல்லாம் செய்து முடிக்க முடியும்.